கனடாவின் மொண்ட்ரியால் மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், எதிர்வந்த ரயில் மோதி உயிரிழந்ததாக மொண்ட்ரியால் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 10 மணியளவில் ‘லயோனல்-குரூ’ மெட்ரோ நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தண்டவாளத்தில் விழுந்த நபர் மீண்டும் மேடைக்கு ஏறுவதற்குள், வந்த ரயிலை உடனடியாக நிறுத்த முடியாமல் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு ‘அர்ஜன்சஸ்-சாந்தே’ அவசர மருத்துவக் குழுவினர், மொண்ட்ரியால் தீயணைப்புத் துறை, மொண்ட்ரியால் காவல்துறை மற்றும் ஊழியர்கள் உடனடியாக விரைந்தனர்.
“நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தபோது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை” என்று அவசர மருத்துவச் சேவை செய்தித் தொடர்பாளர் ஜூலி காலின் கூறினார்.
இறந்தவரின் வயதை உறுதிப்படுத்திய மொண்ட்ரியால் காவல்துறை, முதற்கட்ட விசாரணையில் இது விபத்தாகவே தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளது.
கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபரை யாரும் தள்ளவில்லை என்பதும், இதில் எந்தவொரு குற்றவியல் பின்னணியும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.