தனிப்பட்ட பராமரிப்புப் பணியாளர் என நம்பித் தம்மைப் பணிக்கு அமர்த்திய குடும்பங்களின் வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் கனடாவின் நியூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 36 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களால் குறித்த பெண் பணிக்கு அமர்த்தப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் பணியாற்றிய போது நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அவர் திருடியுள்ளதாகப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காசோலைகள், மருந்து வகைகள் மற்றும் கனடிய மற்றும் அமெரிக்க டொலர் பணத்தாள்களும் திருடப்பட்ட பொருட்களில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது உள்ளூர் அடகுக் கடைகளைத் தொடர்பு கொண்டு திருடப்பட்ட சில பொருட்களைப் பொலிஸார் மீட்டு, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வார முற்பகுதியில் சோதனை வாரண்ட் அடிப்படையில் சோதனை நடத்திய பொலிஸார், கெய்லி பிரியானா ஹாரிசன் என்ற அப்பெண்ணைக் கைது செய்தனர்.
அவருக்கு எதிராக 5,000 டொலருக்கும் குறைவான மோசடி மற்றும் 5,000 டொலருக்கும் குறைவான திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், 5,000 டொலருக்கும் அதிகமான திருட்டு, போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், முன்னர் அவரைப் பணிக்கு அமர்த்தியவர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் பல திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட வேண்டியுள்ளதாகவும், தகவல்கள் தெரிந்தவர்கள் 1-866-876-5423 (நீட்டிப்பு 7142) என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.