அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்தை, நெய்ட் மெக்லாகன் என்பவரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
கனடிய ராயல் கடற்படையில் ஆயுதத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றி வரும் நெய்ட் மெக்லாகன், கடந்த 20 ஆண்டுகளாக ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆண்டு மட்டும் தொலைந்துபோன 25 பொருட்களையாவது உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
ஜெஃப் டக்ளாரிஸ் பயிற்சிக்காக கனடாவிற்கு வந்திருந்தபோது, தனது நண்பர்களுடன் ‘கேஜிம்குஜிக் தேசியப் பூங்காவில்’ உள்ள ஏரியில் காயாக்கிங் படகுச் சவாரி செய்தார். பாறைகளில் ஏறி ஏரி நீரில் குதித்தபோது, அவரது விரலிலிருந்த 14-காரட் தங்கத் திருமண மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்தது.
திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகத் தனது விரலை விட்டுப் பிரியாத மோதிரம் தொலைந்ததால் மனமுடைந்த டக்ளாரிஸ், அதைத் தேட முயன்றும் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனே அந்த இடத்தைக் குறிப்பாய்வு செய்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் உதவி தேடியபோது, மெக்லாகனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
டக்ளாரிஸ் தனக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த வார இறுதியில் டைவிங் உடைகள் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் அந்த ஏரிக்குச் சென்றார் மெக்லாகன். ஆச்சரியப்படும் விதமாக, ஏரியின் அடியில் தேடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாறைகளுக்கு இடையே மின்னிய அந்தத் தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தார்.
கடந்த ஆண்டில் 13 தொலைந்த பொருட்களை மீட்டுத் தந்த மெக்லாகன், இதை ஒரு பொழுதுபோக்காகவும் தன்னார்வத் தொண்டாகவுமே செய்து வருகிறார்.
இதற்காக அவர் யாரிடமும் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெறுவதில்லை; தூரப் பயணங்களுக்கான எரிபொருள் செலவை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோதிரங்கள், கைபேசிகள், சாவிக்கொத்துகள் மட்டுமின்றி, முதல் உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கங்கள், பீரங்கி உதிரிபாகங்கள் எனப் பல அரிய பொருட்களையும் இவர் ஏரிகளிலிருந்து கண்டெடுத்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.