கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் கால்நடை திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக விவசாயிகள் கவலை வெளியிட்டு வரும் நிலையில், இத்தகைய குற்றங்களைத் தடுக்க சிறப்பு பொலிஸ் அதிகாரியை நியமிக்க மாகாண அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேனிடோபாவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அண்மைக்காலமாக கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.
வின்னிபெக் நகரிலிருந்து வடமேற்கே சுமார் 39 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வாரன் (Warren) பகுதியில் கால்நடைப் பண்ணை நடத்திவரும் டேரன் மேக்மில்லன் (Darren MacMillan), கால்நடை வளர்ப்பு தனக்கு மிகவும் பிடித்தமான தொழில் என்றாலும், திருட்டுச் சம்பவங்கள் குறித்த அச்சம் தொடர்ந்து நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது பண்ணையில் அதிக மதிப்புள்ள கால்நடைகளை வளர்த்துவரும் அவர், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், பாதுகாப்பு குறித்த கவலை நீங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
சிறுவயதில் திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் உடல்களைப் பார்த்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும், அயலவர்களின் பெருமளவிலான கால்நடைகள் திருடப்பட்ட சம்பவங்களையும் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை தனது பண்ணையில் திருட்டுச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும், எந்த நேரத்திலும் அவ்வாறான சம்பவம் நிகழலாம் என்ற அச்சம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் 57 வழக்குகள் பதிவு!
மேனிடோபா அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான ஐந்து ஆண்டுகளில் கால்நடை திருட்டு மற்றும் மோசடி தொடர்பாக 57 சம்பவங்கள் கனடிய அரச பொலிஸாரிடம் (RCMP) பதிவாகியுள்ளன.
கால்நடைகளின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், திருட்டுச் சம்பவங்கள் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.
கால்நடை திருட்டைத் தடுக்க சிறப்பு பொலிஸ் அதிகாரி!
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கால்நடை தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கென தனியான பொலிஸ் அதிகாரியை நியமிப்பதற்கு நிதி வழங்கப்படும் என மேனிடோபா அரசு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 8ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை, மாகாண நீதித்துறை அமைச்சர் மேட் வீபே (Matt Wiebe) மற்றும் விவசாயத் துறை அமைச்சர் ரான் கோஸ்டிஷின் (Ron Kostyshyn) ஆகியோர் வெளியிட்டனர்.
இதன்படி, கனடிய அரச பொலிஸின் பொதுப் புலனாய்வுப் பிரிவில் (RCMP General Investigative Section) கால்நடை திருட்டு மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கென ஒரு சிறப்பு அதிகாரி பணியமர்த்தப்படவுள்ளார்.
இந்த அதிகாரி விவசாயிகள், கால்நடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏனைய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே நோக்கம்!
கால்நடை திருட்டு என்பது விவசாயிகளின் வருமானத்தை மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பதாக நீதித்துறை அமைச்சர் மேட் வீபே தெரிவித்துள்ளார்.
சட்ட அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலமும், விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலமும், விவசாயத் துறைக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேனிடோபாவின் கால்நடை வளர்ப்புத் துறை மாகாணப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக விவசாயத் துறை அமைச்சர் ரான் கோஸ்டிஷின் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்சுவான் மாகாணங்களில் நடைமுறையில் உள்ள திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு, மேனிடோபாவிலும் கால்நடை ஆய்வு மற்றும் கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சிறப்பு பொலிஸ் அதிகாரியின் நியமனம், கால்நடை திருட்டு மற்றும் மோசடிகளைத் தடுப்பதுடன், விவசாயிகளின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.