கனடிய இராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் ஆட்கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் திருடியமை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு இராணுவப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லோரா மெக்கின்டயர்-கிரில்ஸ் அளித்த தகவலின்படி, சசிந்த பெர்னாண்டோ மற்றும் ஜேம்ஸ் மோரோ ஆகிய இருவருமே 2026 ஆகஸ்ட் 11 அன்று கைது செய்யப்பட்டனர்.
இவ்விருவரும் ‘பொம்பார்டியர்’ பதவி வகிக்கும் வீரர்களாவர். இவர்கள் கனடாவின் 32 ஆம் பிரிகேடின் அங்கமான, ‘7 ஆம் ரொறன்ரோ ரெஜிமென்ட்’ என்ற பீரங்கிப் படையணியின் பகுதிநேரப் படையினராவர். இப்படையணி டொரன்ரோவின் மாஸ் பார்க் ஆயுதக் கிடங்கு தளத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இவர்களில் ஜேம்ஸ் மோரோ மார்ச் 2018 இல் கனடிய இராணுவத்தில் பகுதிநேர வீரராக இணைந்து, 2020 இல் ‘ஒப்பரேஷன் லேசர்’ நடவடிக்கையில் களமிறக்கப்பட்டவர்.
சசிந்த பெர்னாண்டோ ஜனவரி 2020 இல் இணைந்தவர் என்றும், அவர் இராணுவத்தின் எந்தவொரு கள நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் இராணுவக் கடமைகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கனடிய ஆயுதப்படையின் உபகரணங்கள், வசதிகள் மற்றும் தளங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்கள் மீது நிர்வாகச் சரிபார்ப்பு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் அவர்கள் ஆயுதப்படையில் தொடர்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.