Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் விற்பனை செய்யப்பட்ட ‘Whole Foods Market’ நிறுவனத்தின் குவாக்கமோல், சால்சா, பிகோ டி காலோ உள்ளிட்ட பல ஆயத்த உணவுப் பொருட்களில் சால்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய உணவு ஆய்வு முகவரகமான Canadian Food Inspection Agency (CFIA) ஆகஸ்ட் 13ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தப் பொருட்கள் ஒன்ராறியோவிலும் இணையவழியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 22 வகையான பொருட்கள் இந்தத் திரும்பப்பெறல் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

திரும்பப்பெறப்படும் பொருட்களில் பல்வேறு வகையான Guacamole, Pico de Gallo, Salsa, Chicken Quesadilla ஆகியவற்றுடன் Caribbean Mango Pineapple Turkey Burger மற்றும் Caribbean Peach Salsa Turkey Burger உள்ளிட்ட ஆயத்த உணவுகளும் அடங்குகின்றன.

Whole Foods Market தயாரிப்புகளில் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் “Best Before” திகதிகள் பொதுவாக 2026 ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை உள்ளன. மேலும் சில Salsa மற்றும் Pico de Gallo தயாரிப்புகளுக்கு ஆகஸ்ட் 16 வரை காலாவதி திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மெக்சிகோ மிளகாயுடன் தொடர்பு

இந்தத் திரும்பப்பெறல் நடவடிக்கை அமெரிக்காவில் இடம்பெற்று வரும் சால்மோனெல்லா நோய்த்தொற்று விசாரணையுடன் தொடர்புடையது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDA தகவலின்படி, Coast Citrus Distributors மூலம் விநியோகிக்கப்பட்ட புதிய Jalapeño மிளகாய்களுடன் நோய்த்தொற்று தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மிளகாய்களை வழங்கிய மெக்சிகோவின் Sinaloa பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர் ஒருவர் சாத்தியமான மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக FDA தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திரும்பப்பெறல் நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே கனடாவிலும் சம்பந்தப்பட்ட Whole Foods Market பொருட்கள் திரும்பப்பெறப்படுகின்றன என்று CFIA தெரிவித்துள்ளது.

கனடாவில் இதுவரை பாதிப்பு இல்லை

இந்தப் பொருட்களை உட்கொண்டதுடன் தொடர்புடைய நோய்ப் பாதிப்புகள் கனடாவில் இதுவரை பதிவாகவில்லை என்று CFIA உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான விசாரணை தொடர்வதால் மேலும் சில பொருட்கள் திரும்பப்பெறப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சால்மோனெல்லா – எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சால்மோனெல்லா பாக்டீரியாவால் மாசடைந்த உணவுகள் பார்ப்பதற்கோ அல்லது வாசனைக்கோ கெட்டுப்போனதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை உட்கொண்டால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். குறிப்பாக சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக CFIA எச்சரித்துள்ளது.

வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

திரும்பப்பெறப்பட்ட பொருட்கள் வீட்டில் உள்ளதா என்பதை நுகர்வோர் சரிபார்க்குமாறு CFIA கேட்டுக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொருட்களை உண்ணவோ, பரிமாறவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

அத்தகைய பொருட்களை குப்பையில் அகற்றவோ அல்லது வாங்கிய இடத்திற்குத் திருப்பிக் கொடுக்கவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை உட்கொண்ட பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் CFIA கேட்டுக்கொண்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.