Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் குயெல்ஃப் (Guelph) நகருக்கு அருகிலுள்ள புஸ்லிஞ்ச் (Puslinch) பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

வாட்சன் வீதி தெற்கு (Watson Road South) பகுதியில் இடம்பெற்ற இந்த ஒற்றை வாகன விபத்தில், வாகனத்தில் பயணித்த ஆறு பேரில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாணக் காவல்துறையினர் (OPP) தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில், சாலை வளைவுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புச் சுவர் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. தடுப்புச் சுவருக்கு மறுபுறம் மரங்கள் நிறைந்த பள்ளமான பகுதி அமைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனமும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான தகவல்களை அறிவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை சார்பில் ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் வகையில், அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் மோப்ப நாய் பிரிவினரின் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடுவதற்காக ராக்வுட் (Rockwood) காவல் நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.