கனடாவில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் திடீரெனத் தடைப்பட்டால், பொதுமக்கள் குறைந்தது 72 மணி நேரம் (3 நாட்கள்) தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை (Public Safety Canada) அறிவுறுத்தியுள்ளது.
இது புதிய எச்சரிக்கை அல்ல என்றும், பல ஆண்டுகளாக கனடியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அவசரகால முன்னெச்சரிக்கை ஆலோசனையே என்றும் அத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அண்மையில் இயற்கைப் பேரிடர்கள், இணையவழித் தாக்குதல்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
அவசரகாலத் தேவைக்காக ஒவ்வொரு குடும்பமும் குடிநீர், நீண்ட நாட்கள் கெடாத உணவுப் பொருட்கள், மருந்துகள், மின்விளக்கு, மின்கலன்கள், முதலுதவிப் பொருட்கள் மற்றும் சிறிதளவு பணம் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒருவருக்கு நாளொன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் குடிநீர் என்ற அடிப்படையில் மூன்று நாட்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்திருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பேரிடர் மேலாண்மை நிபுணர் சுசான் பெர்னியர், மூன்று நாட்களுக்குப் பதிலாக குறைந்தது ஏழு நாட்களுக்குத் தேவையான பொருட்களை வைத்திருப்பது சிறந்தது எனக் கூறியுள்ளார்.
இந்த அறிவுறுத்தல்கள் உடனடியாக ஏதேனும் பேரிடர் ஏற்படப்போவதற்கான எச்சரிக்கை அல்ல; எதிர்பாராத அவசரநிலைகளைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.