கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்டிச் சென்று சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளாக்கிய 13 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜூலை 25 அன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெர்மினல் அவென்யூ பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நானைமோ போலீஸ் அதிகாரி ஒருவர், மணிக்கு 50 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், கார் ஒன்று 118 கி.மீ வேகத்தில் அதிவேகமாகச் செல்வதைக் கண்டறிந்தார்.
காரை நிறுத்த அதிகாரி முயன்றபோது, அது அதிவேகத்தில் தப்பிச் சென்றது. இதையடுத்து, காரின் அதிவேகம் மற்றும் ஆபத்தான பயணத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்த வேண்டாம் என காவல்துறை முடிவு செய்தது.
அதிவேகம் மற்றும் காரை ஓட்டிய விதம் காரணமாக நாங்கள் அதனைப் பின்தொடர வேண்டாம் என முடிவு செய்தோம் எனபொலிஸார் தெரிவித்தனர். சிறிது நேரத்தில், அந்த கார் அருகிலுள்ள சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். காரை ஓட்டியவர் வெறும் 13 வயது சிறுமி என்பதைக் கண்டு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
காரில் அந்த சிறுமி மட்டுமே இருந்தாரென்றும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை. சேதமடைந்த கார் மீட்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.