கனடாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் அப்பாவிப் பயணிகளின் பெயரில் போதைப்பொருட்களைக் கடத்தும் அதிர்ச்சிகரமான மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையங்களில் பணிபுரியும் சில ஊழியர்கள், பயணிகளின் சூட்கேஸ்களில் ஒட்டப்பட்டுள்ள அடையாளச் சீட்டுகளை அகற்றி, அவற்றைப் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறு சூட்கேஸ்களில் ஒட்டி கடத்தலில் ஈடுபடுவதாக CTV News நிறுவனத்தின் W5 புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், போதைப்பொருட்கள் அடங்கிய சூட்கேஸ்கள் அப்பாவிப் பயணிகளின் பெயரில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறான 24-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் சிக்கிய கனடியப் பயணிகள் பலர், தங்களுக்குச் சொந்தமில்லாத சூட்கேஸ்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கே பலர் கடுமையான சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடியைத் தடுக்க விமான நிலையப் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள கனேடிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மொன்றியலைச் சேர்ந்த Tamperguard நிறுவனத்தின் பில் ட்ரோரி (Bill Drori), இந்தப் பிரச்சினைக்குக் குறைந்த செலவில் தொழில்நுட்பத் தீர்வு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது நிறுவனம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, ஒருமுறை அகற்றப்பட்டால் மீண்டும் பயன்படுத்த முடியாத வகையிலான விசேட பயணப் பொதி அடையாளச் சீட்டை உருவாக்கியுள்ளது.
சாதாரண அடையாளச் சீட்டுகளை அகற்றி வேறொரு சூட்கேஸில் ஒட்ட முடியும். ஆனால், இந்தப் புதிய சீட்டை அகற்றினால் அதில் ‘VOID’ (செல்லுபடியற்றது) என்ற வாசகம் தோன்றுவதுடன், மீண்டும் ஒட்ட முடியாத வகையில் அதன் ஒட்டும் தன்மையும் நீங்கிவிடும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகளின் பெயரில் போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக அடையாளச் சீட்டுகளை மாற்றும் மோசடியைத் தடுக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விமானப் பயணிகள் தங்களது சூட்கேஸ்கள், அடையாளச் சீட்டுகள் மற்றும் அவற்றின் எடை தொடர்பான விவரங்களை விமான நிலையத்தில் ஒப்படைப்பதற்கு முன்பு புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு கனேடிய அரசு அறிவுறுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.