கனடாவின் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட தீவிர காலநிலை காரணமாக சுமார் 840 மில்லியன் டொலர் காப்பீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை, பலத்த புயல் காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள், பிரெய்ரி மாகாணங்களில் தொடர்ச்சியாக பெரும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வருவதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
டொராண்டோவை மையமாகக் கொண்ட வானிலை மற்றும் பேரிடர் பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் கனடாவின் காப்பீட்டுப் பணியகம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவானில் இரண்டு நாட்கள் நீடித்த கடுமையான புயல், பலத்த காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையால் வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் மட்டும் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் மாகாணங்களில் தீவிர காலநிலை காரணமாக ஏற்பட்ட காப்பீடு செய்யப்பட்ட மொத்த இழப்பு சுமார் 760 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
இதில் சுமார் 430 மில்லியன் டொலர் இழப்பு காட்டுத்தீ காரணமாக மட்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு முதல் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் பகுதிகளில் சுமார் 30 பெரிய பேரிடர் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இவற்றினால் ஏற்பட்ட காப்பீடு செய்யப்பட்ட மொத்த இழப்பு 2.5 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்விரு மாகாணங்களிலும் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக சுமார் 1,000 டொலர் அளவிலான காப்பீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 140 சதவீத அதிகரிப்பு என கூறப்படுகிறது.
கனடாவில் தீவிர காலநிலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சொத்து சேதங்களும் காப்பீட்டு கோரிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது காப்பீட்டுத் துறை மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.




