கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கடந்த மாதம் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட பெண் ஒருவர் உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போயிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேரி காட்போய்ஸ் (Mary Gadbois) என்ற பெண்ணுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது உறவினர் ஒருவர் ஜூன் 14ஆம் திகதி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மேரி சமீபத்தில் காணாமல் போகவில்லை என்பதும், அவர் கடைசியாக 2021ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிஷன் (Mission) பகுதியில் காணப்பட்டார் என்பதும் தெரியவந்தது.
அதன் பின்னர் பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காதபோதிலும், அவர் காணாமல் போனது தொடர்பாக உடனடியாக யாரும் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அண்மையில் அவரது உறவினர் ஒருவர் மேரியைத் தொடர்புகொள்ள முடியாததைத் தொடர்ந்து பொலிசாரை அணுகியுள்ளார். பொலிசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், ஆரம்பத்தில் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மிஷன் நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தமை விசாரணையின்போது தெரியவந்தது.
மேரி கடைசியாக மிஷன் பகுதியில் வசித்திருந்ததால், அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் அவருடையவையாக இருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிசார், நீதிமருத்துவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக ஆய்வுகளின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மேரி காட்போய்ஸுடையவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் இதில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் உள்ளனவா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.




