Reading Time: < 1 minute

தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், துப்பாக்கியைப் பயன்படுத்த ஒரு நொடியும் தயங்க மாட்டேன் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

டொராண்டோவில் அண்மையில் வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குயின்ஸ் பார்க்கில் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது குடும்பத்தினரைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டக் ஃபோர்ட் கடந்த 40 ஆண்டுகளாகச் சட்டபூர்வமாக வேட்டைத் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தனித்தனியாகப் பாதுகாப்பான இடங்களில் பூட்டி வைத்திருப்பதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

டொராண்டோவின் பொப்லர் பிளெய்ன்ஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 39 வயதான இசைக்கலைஞர் மைக்கேல் எக்கர்ட் உயிரிழந்துள்ளார். இது 2026ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான 37ஆவது கொலைச் சம்பவமாகும்.

இந்த ஆண்டில் மட்டும் டொராண்டோவில் 111 வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தமது சொந்த வீடுகளிலேயே பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வது மிகுந்த கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டக் ஃபோர்ட்டின் கருத்து பொறுப்பற்றது என ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மாரிட் ஸ்டைல்ஸ் விமர்சித்துள்ளார்.

மக்களை ஆயுதம் ஏந்துமாறு ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நீதிமன்ற வழக்குகளின் தேக்கநிலையைக் குறைத்து, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண அரசு முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.