Reading Time: < 1 minute

கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள ஸ்கார்பரோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த டி.டி.சி பேருந்திற்குள் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

எக்லிண்டன் அவென்யூ ஈஸ்ட் மற்றும் ஃபால்மவுத் அவென்யூ ஆகிய வீதிகள் சந்திக்கும் பகுதியில், இரவு 10 மணியளவில் பேருந்திற்குள் இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர் பேருந்திலிருந்து இறங்கித் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தொடர்பான எந்தவொரு விபரத்தையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டொரொண்டோ பொலிஸாரின் கொலைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

இச்சம்பவம் குறித்து டி.டி.சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்தீப் லாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து டொரொண்டோ மக்களையும் போலவே, நேற்றிரவு பேருந்திற்குள் இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் எனக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது பேருந்து சாரதிக்கும் தேவையான முழுமையான ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் விசாரணைகளுக்கு வாக்குமூலங்கள் மற்றும் கண்காணிப்புக் கமரா காணொளிகள் உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்புகளையும் தமது நிறுவனம் முழுமையாக வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.