கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சொத்து வரியை உயர்த்துவதற்கான புதிய வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
கல்கரி மாநகராட்சி நவம்பர் 10ஆம் திகதி வெளியிட்ட 2027 முதல் 2030 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 2027ஆம் ஆண்டில் சொத்து வரி வருவாயை 15 சதவீதம் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2028ஆம் ஆண்டில் 10 சதவீதமும், 2029ஆம் ஆண்டில் 7.7 சதவீதமும், 2030ஆம் ஆண்டில் 6 சதவீதமும் வரி வருவாய் உயர்த்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், 688,000 கனேடிய டொலர் மதிப்புள்ள சராசரி வீட்டின் உரிமையாளர், 2027ஆம் ஆண்டில் சொத்து வரியாக மாதத்திற்கு 37 டொலரும், குடிநீர், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி சேவைகளுக்காக மேலும் 16 டொலரும் செலுத்த வேண்டியிருக்கும்.
இதன்படி, மாதத்திற்கு 53 டொலர் வீதம் ஆண்டுக்கு 636 டொலர் கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் 706,000 டொலராக இருந்த சராசரி வீட்டின் மதிப்பு, 2027ஆம் ஆண்டில் 688,000 டொலராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சொத்து வரிச் சுமை அதிகரிக்கவுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மதிப்பும் 5.6 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியுடன் பொதுப் போக்குவரத்து, பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பல்வேறு நகராட்சி சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நகரின் குடிநீர் கட்டமைப்பு, சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி தேவைப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வரவு செலவுத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நவம்பர் 23ஆம் திகதி நகரசபையில் விவாதங்கள் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.