கனடாவின் லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுத் தொகையான 90 மில்லியன் கனடிய டொலர்களை அல்பேர்ட்டா மாகாணத்தின் கல்கரி நகரைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் வென்றுள்ளனர்.
அக்டோபர் 20ஆம் திகதி நடைபெற்ற Lotto Max குலுக்கலில் வெற்றி பெற்ற ஐடெல்சன் எல்சிகோ (Eidelson Elchico), ஹேஸலின் ஓங் (Hazeline Ong), வெல்னா ராமிரெஸ் (Velna Ramirez), லவ்லின் மால்வர் (Lovelyn Malvar) ஆகியோரின் பெயர்கள் நவம்பர் 6ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கும் இவர்கள், “Manifesting Millions” என்ற பெயரில் குழு உரையாடலை உருவாக்கி, இணையம் மூலம் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் மின்னஞ்சலைப் பார்த்தபோது பரிசு கிடைத்ததை அறிந்த எல்சிகோ, உடனடியாக மற்ற நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
90 மில்லியன் டொலர் பரிசுத் தொகையைச் சமமாகப் பகிர்ந்துகொள்வதால் ஒவ்வொருவருக்கும் தலா 22.5 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது.
வெற்றி பெற்ற நால்வரும் வீட்டுக் கடன்களை அடைக்கவும், குடும்பத்தினருக்கு உதவவும், சமூக நலத் திட்டங்களுக்குப் பங்களிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றி கனடாவின் லாட்டரி வரலாற்றில் புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.