Reading Time: < 1 minute

கனடாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது கல்வி அனுமதிப்பத்திரத்தில் (Study Permit) குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே பணியாற்ற முடியும் என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) எச்சரித்துள்ளது.

Tamil Business Directory

கனடாவுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவருக்கும் தானாகவே பணிபுரியும் உரிமை வழங்கப்படுவதில்லை. அவர்களது கல்வி அனுமதிப்பத்திரத்தில் பணிபுரிவதற்கான அனுமதி குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அதற்கான தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கல்வி நிலையங்களுக்கு வெளியே பணியாற்ற அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டு மாணவர்கள், வழக்கமான கல்விக் காலப்பகுதியில் வாரத்திற்கு அதிகபட்சமாக 24 மணித்தியாலங்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும், கல்வி நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறை போன்ற காலப்பகுதிகளில், தகுதியுடைய மாணவர்கள் 24 மணித்தியால வரம்பின்றி பணியாற்ற முடியும்.

விதிகளை மீறினால் கடும் விளைவுகள்!

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாகப் பணியாற்றுவது அல்லது உரிய அனுமதியின்றிப் பணிபுரிவது கல்வி அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறும் செயலாகக் கருதப்படும் என IRCC தெரிவித்துள்ளது.

இவ்வாறு விதிகளை மீறும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது மாணவர் அந்தஸ்தை இழக்க நேரிடுவதுடன், எதிர்காலத்தில் கல்வி அல்லது பணி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

மேலும், விதிமீறல்களின் தீவிரத்தைப் பொறுத்து கனடாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் பணியாற்றும் மணித்தியாலங்களை முறையாகக் கண்காணிப்பதுடன், கல்வி அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, கனடாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வி அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளைச் சரிபார்த்து, அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் பணியாற்றுவது அவசியம் என கனடாவின் குடிவரவு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.