கனடாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் வேலை செய்வது தொடர்பான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) மீண்டும் நினைவூட்டியுள்ளது.
சர்வதேச மாணவர் ஒருவரின் கல்வி அனுமதிப் பத்திரத்தில் (Study Permit), கனடாவில் வேலை செய்வதற்கான அனுமதி குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர் வளாகத்திலோ அல்லது வளாகத்திற்கு வெளியிலோ பணிபுரிய முடியும்.
வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதிபெற்ற சர்வதேச மாணவர்கள், வழக்கமான வகுப்புகள் நடைபெறும் கல்விக் காலத்தில் வாரத்திற்கு அதிகபட்சமாக 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேவேளை, கல்வி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை மற்றும் வாசிப்பு வாரம் போன்ற திட்டமிடப்பட்ட விடுமுறைக் காலங்களில், தகுதியுள்ள மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே வரையறையற்ற மணிநேரங்கள் வேலை செய்யலாம்.
வாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட 24 மணி நேர வரம்பை மீறி வேலை செய்வது கல்வி அனுமதியின் நிபந்தனைகளை மீறும் செயலாகக் கருதப்படும் என IRCC எச்சரித்துள்ளது.
இதனால் மாணவர்கள் தங்களது சட்டபூர்வமான மாணவர் அந்தஸ்தை இழக்க நேரிடுவதுடன், எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
வேலை செய்யும் மணிநேரங்களைக் கண்காணித்து, கல்வி அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றுவது ஒவ்வொரு மாணவரின் பொறுப்பாகும்.
மேலும், மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடங்கியிருக்க வேண்டும், தகுதிபெற்ற கல்வி நிறுவனத்தில் தேவையான மாணவர் நிலையைப் பராமரிக்க வேண்டும் மற்றும் செல்லுபடியாகும் சமூகக் காப்புறுதி இலக்கத்தை (SIN) வைத்திருக்க வேண்டும்.
எனவே, சர்வதேச மாணவர்கள் வேலை ஒன்றைத் தொடங்குவதற்கு முன்னர் தங்களது கல்வி அனுமதிப் பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளைச் சரிபார்த்து, அனுமதிக்கப்பட்ட வேலை நேரத்தை மீறாமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




