பல கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்புக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை விதிக்கும் திட்டம் தமது அரசாங்கத்திடம் இல்லை என ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஒளிபரப்பான தொலைபேசி அழைப்பு வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க மதுபானங்களின் விற்பனையைத் தடை செய்வது மிகவும் தீவிரமான நடவடிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் பொருட்களைத் தங்களது கடைகளில் விற்பனைக்கு வைப்பதா என்பதைச் சில்லறை விற்பனையாளர்களும், அவற்றைக் கொள்வனவு செய்து பயன்படுத்துவதா என்பதை நுகர்வோர்களும் தீர்மானிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா கனடியப் பொருட்களை நாட்டிற்குள் அனுமதிக்க முற்றாகத் தடை விதிக்கவில்லை என்பதை கனடியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
எனவே, அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கு முழுமையான தடை விதிப்பது அளவுக்கு மீறிய நடவடிக்கையாக அமைந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.
கனடா இந்த வர்த்தகப் பிரச்சினையை நிதானமாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் என வலியுறுத்திய அவர், உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சினையையும் தனித்தனியாக அணுகித் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களின் ஆதரவையும் புரிந்துணர்வையும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே, மதுபானத் தடையை விதிப்பதைவிடச் சிறந்த அணுகுமுறையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டிரம்பின் முந்தைய வரி அச்சுறுத்தல்கள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவது தொடர்பான கருத்துகளுக்குப் பதிலடியாக, கடந்த ஆண்டு கனடாவின் பல மாகாண மதுபானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் அமெரிக்க மதுபானங்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்தியிருந்தன.
ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காச்சுவான் மாகாணங்கள் சில மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவந்தன. எனினும், ஒன்டாரியோ மற்றும் கியூபெக் உள்ளிட்ட முக்கிய சந்தைகள் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவரவில்லை.
அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி நடவடிக்கை அனைத்து கனடியப் பொருட்களுக்கும் அல்லாமல், மதுபானம், பால் உற்பத்திப் பொருட்கள், ஆடைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிகளைப் பாதிக்கக்கூடும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.




