Reading Time: < 1 minute

இன்று காலை ஸ்காபரோவில் நடந்து சென்ற ஒரே குடுத்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் மீது வாகனம் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைத் தேடி வருவதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எல்ஸ்மெயர் வீதி மற்றும் ஃபார்மசி அவனியூ பகுதியில் இன்று முற்பல் 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ள காவல்துறையினர், எல்ஸ்மெயர் வீதியில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று, ஃபார்மசி அவனியூவை அண்மித்த போது, முன்னே நின்று கொண்டிருந்த சில வாகனங்களைக் கடந்து வேகமாகச் சென்றதாகவும், குறித்த அந்தச் வீதிச் சந்திப்பின் சிவப்பு சமிக்கையிலும் நிற்காது பயணித்த அந்த வாகனம், வீதியோர நடைபாதை மீது மோதியதாகவும், இதன்போது அங்கே நடந்து சென்று கொண்டிருந்த 57 வயதுப் பெண் ஒருவரும், 37 வயதுப் பெண் ஒருவரும், தள்ளுவண்டியில் இருந்த 20 மாத ஆண் குழந்தை ஒன்றும் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மோதலை அடுத்து வாகனம் அங்கே நின்றதாகவும், வாகனத்தில் இருந்த இருவர் இறங்கி அந்தப் பகுதியில் உலாவி நிலவரத்தைப் பார்த்ததாகவும், அவர்களில் ஒருவர் மீண்டும் வாகனத்தில் ஏறி ஃபார்மசி அவனியூவில் தெற்கு நோக்கி வாகத்தைச் செலுத்தி தப்பிச் சென்றதாகவும், மற்றையவர் அங்கிருந்து கால்நடையாகவே தப்பித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் 2015ஆம் ஆண்டு தயாரிப்பான சாம்பல் நிற “Dodge Journey” ரக வாகனம் எனவும், மோதலின் போது வாகனத்தின் முன்பக்க இலக்கத் தகடு அங்கேயே கழன்று வீழந்துவிட்டதாகவும், அது ஒன்ராறியோ பதிவிலக்கமான ANXC 265 எனவும் காவல்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.