ஒன்ராறியோ மாகாணம் முதுவதற்குமான வீ்ட்டில் தங்கும் உத்தரவு உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அரச அரப்பு தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழன் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த உத்தரவு மே -6 ஆம் திகதி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒன்ராறியோவில் மாகாணம் முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்திய மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது குறித்து முதல்வர் டக் போர்ட் தலைமையில் அமைச்சரவை நேற்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் கருத்து வெளியிட்ட ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட், மாகாணத்தில் மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என சூசகமாகக் கூறினார்.
இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை இறுதி செய்ய அமைச்சரவை புதன்கிழமை மீண்டும் கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்போதே ஒன்ராறியோ முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரைவு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புதிய இறுக்கமான கட்டுப்பாடுகளின் பிரகாரம் அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்களை தவிர்த்து பெரும்பாலான வணிகச் செயற்பாடுகள் மூடப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.