Reading Time: < 1 minute

வின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக சென்ற வணிக டிரக் ஒன்றை சோதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம், சுமார் 200 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய மெத்தாம்பேட்டமைன்னை கைப்பற்றியுள்ளது.

மேலும், அம்பஸ்டர் பாலத்தின் வழியாக பயணித்த இந்த டிரக்கிலிருந்து, 96 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய கோகோயினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதவிர பல கைத்துப்பாக்கிகள் மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் என்பவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தெற்கு ஒன்றாரியோ பிரிவின் முகவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி, குறித்த டிரக் சாரதியான மிசிசாகாவை சேர்ந்த 36 வயதான ஒன்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றிருந்தாலும், இதுதொடர்பான தகவலை தற்போதே பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துக்கு கிடைத்த மிகப் பெரிய மெத்தாம்பேட்டமைன் தொகை இதுவாகும்.