வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே நேற்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் ஹயஸ் ரக வேன் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் வவுனியா நகரிலிருந்து நொச்சிமோட்டை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இரு வாகனங்களும் தடம்புரண்டு, விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் முச்சகக்கரவண்டி சாரதியான 43 வயதுடைய குடும்பஸ்தர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கனடா நாட்டு பிரஜையான 55 வயதுடைய நபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக முச்சக்கரவண்டி சாரதி அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ஹயஸ் ரக வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.