கனடாவில் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பித்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளை கவரும் நோக்கில் பல சலுகைகளை வழங்கவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளார்.
ஒன்ராறியோவில் தனது தேர்தல் பிரசார பணிகளை அண்மையில் ஆரம்பித்துள்ள அவர், பிரசாரக் கூட்டத்துக்கு வந்த ஆதரவாளர்களுடன் உற்சாகமாகக் கலந்துரையாடியுள்ளார்.
கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை “வரிகளை குறைப்பேன்” என்ற வாக்குறுதியுடன் பிரதமர் ஆரம்பித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
ஒக்ரோபர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமரின் லிபரல் கட்சியும், எதிர்த்தரப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியும் பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன.
இந்த இரண்டு கட்சிகளும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளை கவர்வதில் போட்டா போட்டியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வரிகளை குறைப்பேன் என்று பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, 11,300 கனேடிய டொலர் வரை வருமானம் ஈட்டும் நடுத்தர மக்கள் இனி வரி செலுத்த தேவையில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 32.9 சதவீத மக்களும், கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு 34.6 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.