Reading Time: < 1 minute

ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் கொள்ளை போயுள்ள நிலையில், இது முதல்முறை அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போனதில், இதுவரை துப்புத்துலங்காமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

ஏர் கனடா விமானத்தில் இருந்து பெட்டகத்தை மொத்தமாக கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். ஆனால் இதுவரை கொள்ளையர்கள் யார், எத்தனை பேர்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் பீல் பிராந்திய பொலிசார் வெளியிடவில்லை.

இந்த நிலையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற ஒரு கொள்ளை சம்பவம் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளதாகவும், இதுவரை அந்த கொள்ளையிலும் துப்புத்துலங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மால்டன் விமான நிலையம் என அறியப்பட்ட தற்போதைய ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து 1952ல் 6 வலுவூட்டப்பட்ட பெட்டிகளில் மொத்தம் 848 பவுண்டுகள் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 10 பெட்டிகளில் 4 எண்ணிக்கை மட்டும் அன்று மாண்ட்ரீல் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அன்றைய மதிப்பில் கொள்ளை போன அந்த தங்கத்தின் மதிப்பு 215,000 டொலர்.

ஆனால் தற்போது 2.35 மில்லியன் டொலர் என கூறுகின்றனர். அந்த தங்கம் ஒருபோதும் மீட்கப்படவில்லை என்பதுடன், தங்கத்தை கொள்ளையிட்டுச் சென்றவர்களும் கைது செய்யப்படவில்லை.