Reading Time: < 1 minute

கடந்த வார இறுதியில் ரொரன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ், கடந்த வார இறுதி நாட்கள் வழக்கத்துக்கு மாறான நாட்களாக காணப்பட்டதாகவும், சனிக்கிழமையில் இருந்து 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொரன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவும் ரொரன்ரோவின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் யோர்க்டேல் வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2:15 அளவில், ரொரன்ரோவின் வடமேற்கே அமைந்துள்ள இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

அதன் பின்னர் காலை 4:20 அளவில், ரொரன்ரோ Church Street மற்றும் Adelaide Street பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிராபத்தான காயங்களுக்கும், மேலும் ஒருவர் பாரதூரமான காயங்களும் என இருவர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல Liberty Village பகுதியில் அதிகாலை 3:30 அளவில் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் வெற்றுத் தோட்டாக்கள் காணப்பட்டதாகவும், மக்கள் செறிந்து வாழும் அந்தக் குடியிருப்புப் பகுதிக் கட்டிடங்களில் சுமார் 12 துப்பாக்கிச் சூட்டுத் துளைகள் ஏற்பட்டிருந்ததாகவும், அதே பகுதியில் பிற்பகல் வேளையிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இதன்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

wealthy Bridle Path குடியிருப்புப் பகுதி வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பர்ககிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையும் ரொரன்ரோவின் வடமேற்கே, Dufferin Street மற்றும் Lawrence Avenue West பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.