Reading Time: < 1 minute

ரொரன்ரோவின் வடக்கே வோன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அமெரிக்கர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டெக்ஸாசைச் சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 அளவில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்ததை அடுத்து குறித்த இந்தச் சம்பவம் தமது கவனத்திற்கு வந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அன்று வெஸ்டன் வீதிக்கு மேற்கே, Steeles Avenue Westஇல் அமைந்துள்ள இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில் குறித்த அந்த நபர் இருந்ததாகவும், அங்கே வேறு சில ஆண்களுடன் அவர் சண்டையிட்டதாகவும் தெரியவருவதாக விசாரணை அதிகாரிகள் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர் மீது பலமுறை துப்பாக்கிப் பிரயோகமும், பலமுறை கத்திக் குத்தும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இதுவரை சந்தேக நபர் குறித்த விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும், இது குறித்து தகவல் அறிந்தோர் தம்மை 1-866-876-5423 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.