Reading Time: < 1 minute

ரொரன்ரோ நகரின் ஈட்டோபிக்கோ ஜேம்ஸ் டவுன் குடியிருப்புப் பகுதி மற்றும் வோலஸ் எமேர்சன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது சம்பவம் நேற்று மாலை 5:30 அளவில், Finch Avenue West மற்றும் Martin Grove வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலின் கீழ் பகுதியில் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், எனினும் அவர் சுவாசித்தவாறு சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரதூரமான நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதனையும் உடனடியாக வெளியிடவில்லை.

இதேவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரத்தில், மாலை 6:30 அளவில், Lansdowne Avenue மற்றும் Dupont Street பகுதியில், Lappin Avenueவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் அங்கே விரைந்த போது, அங்கேயும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கறுப்பு இன ஆண் ஒருவரைத் தேடி வருவதாகவும், அவர் பதின்ம வயதினராக இருக்கக்கூடும் என்றும், சுமார் ஐந்து அடி பத்து அங்குல உயரமானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்று தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.