ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரதணைகளை மேற்கொண்ட ரொரன்ரோ காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை இரவு சென் அன்ட்ரூ தொடரூந்தி நிலையத்தில் சிலருக்கு இடையே மோதல் இடம்பெற்றதாகவும், இதன்போது ரொரன்ரோவைச் சேர்ந்த 62 வயதான தோமஸ் டெனி என்பவர் கத்திக் குத்துக்கு இலக்கானதாகவும், சம்பவம் தொடர்பில் தமக்கு இரவு 10:40 அளவில் அழைப்பு கிடைத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தாங்கள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலை உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு, அங்கிருந்த பெருமளவானோர் சந்தேக நபரை அடையாளம் காண உதவியதாகவும், அங்கிருந்து சிறிது தூரத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் நேற்று இரவு தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர், குறித்த இந்த கத்திக் குத்துத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.