Reading Time: < 1 minute

சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தூதரக உதவிகள் தேவைப்படும் கனடா மக்களுக்கு உதவுவதற்காக ரியாத்திலுள்ள கனடிய தூதரகம் தொடர்ந்து திறந்திருக்கும் என சவூதிக்கான கனடிய தூதுவர் ஜோன்-பிலிப் லின்டோ தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொளிச் செய்தி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் இராணுவ இடிபாடுகள் அல்லது வெடிபொருட்களின் பாகங்களைக் காண்போர் உடனடியாக அவ்விடத்திலிருந்து விலகி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும், அதுகுறித்த புகைப்படங்கள் அல்லது தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் எனவும் தூதர் லின்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அதே முனையத்தைக் இலக்கு வைத்து மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.

கனடாவின் வெளியுறவுத் துறை, சவூதி அரேபியாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறும் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் வாழும் மற்றும் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது ஹூதிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் அருவருக்கத்தக்கது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மார்க் கார்னி தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.