போலந்து விஜயம் செய்துள்ள கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவை நேற்று சந்தித்து உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிராக ரஷ்யாவின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்புக்கு பிரதமர் ட்ரூடோ மற்றும் ஜனாதிபதி டுடா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தப் படையெடுப்பு உலகளவில் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்துள்ளதாகவும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இரு தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர்.
இதேவேளை, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ இருப்புக்கான தனது உறுதிப்பாட்டை புதுப்பிக்கும் கனடாவின் முடிவை பிரதமர் ட்ரூடோ மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக நேட்டோ அமைப்பின் ஒற்றுமையை ட்ரூடோ வலியுறுத்தினார்.
உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது இராணுவத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கனடா மற்றும் போலந்து தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
ரஷ்ய படையெடுப்பை அடுத்து உக்ரைனில் இருந்து தப்பியோடிய 10 இலட்சத்துக்கும் அதிகமான அகதிகளை வரவேற்ற போலந்து அரசாங்கம் மற்றும் மக்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளை பிரதம மந்திரி ட்ரூடோ பாராட்டினார்.
அத்துடன், உக்ரைனில் பணிபுரிந்த 200 க்கும் மேற்பட்ட கனேடிய இராணுவத்தினரை போலந்துக்கு இடமாற்றம் செய்ததற்கு ஜனாதிபதி டுடாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முழு ஆதரவை வழங்கும் அதே வேளையில் ரஷ்யா மீதான பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்யாவைக் கண்டிக்கும் தீா்மானத்தை அண்மையில் நிறைவேற்றியதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நியாயமற்ற மற்றும் வலிந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக வளர்ந்து வரும் சர்வதேச ஒருமித்த கருத்தை கனடா மற்றும் போலந்து தலைவா்கள் வரவேற்றனர்.