Reading Time: < 1 minute

ரொரன்ரொ Bloor Street மற்றும் Park வீதிப் பகுதியில் தனது கணவருடன் நடந்து சென்றுகொண்டிருந்த 86 வயது மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, அந்த வழியே வந்த வழிப்பறித் திருடன் ஒருவரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தச் சம்பவம் தொடர்பிலான காண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரத்தினை வெளியிட்டுள்ள காவல்துறையினர், திருடிய நபரை தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Bloor Street East ற்கு வடக்கே, Asquith Avenueவில் உள்ள பூங்கா வீதியில், கடந்த யூன் மாதம் 12ஆம் திகதி இரவு 8:10 அளவில், குறித்த இந்தத் தம்பதியினர் வடக்கு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், அவர்களின் பின்னால் வந்த 3 நபர்களில் ஒருவரால் இந்த வழிப்பறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கிலி அறுத்தெடுக்கப்பட்டதும் அவர்களைத் துரத்திச் சென்று சங்கிலியை திருப்பிக் கொடுத்துவிடுமாறு அந்த மூதாட்டி கெஞசிய போதிலும், அதனை மீளளிக்க மறுத்த அவர்கள் அங்கிருந்து Park Road மற்றும் Bloor Street East நோக்கித் தப்பிச் சென்றுவிட்டனர்.

சங்கிலியை அறுத்தவர் உள்ளிட்ட அந்த மூன்று நபர்களும் 25இலிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஆண்கள் எனவும், தலையை மூடும் வகையிலான குளிர் ஆடையினை அணிந்திருந்ததாகவும் அடையாளம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், இது தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 416-808-5300 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.