கனடாவில் எட்மன்டன் பகுதியில் தனது முன்னாள் காதலியை 101 முறை குத்திக் கொலை செய்து அவரது இதயத்தை குடியிருப்பில் சுவரில் ஒட்டியதாக குற்றம்சுமத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த காலங்களில் சந்தேகநபரின் வரைபடத்தை கனேடிய பொலிஸார் வௌியிட்டு தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரான சில்வா கொஷ்வால் (Silva Koshwal), தனது காதலியை கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி குடியிருப்பொன்றில் வைத்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு குடியிருப்பின் உள்ளே 101 தடவை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்களுடன் 38 வயது மதிக்கத்தக்க நாடின் ஸ்கோவ் (Nadine Skow) என்ற பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், நாடின் ஸ்கோவ் கொல்லப்பட்ட இறுதி தருணங்களில் கொஷ்வாலினால் மிகவும் வன்முறையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கவலைக்குரிய சம்பவம் என்றும் பிரதிவாதியின் வழக்கறிஞரான பீட்டர் றோயல் என்பவரால் விவரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்கோவும், கொஷ்வாலும் 2014 ஆம் ஆண்டில் பிரிந்து செல்வதற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக காதல் உறவில் இருந்தனர், ஆனால் தம்பதியினரிடையே பிரச்சினைகள் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணான ஸ்கோவ் ஐந்து ஆண்டுகளாக சிமோ குழந்தைகள் மற்றும் இளைஞர் மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்தார்.
அவரது மரணத்திற்கு முந்தைய வார இறுதியில் ஆல்டாவின் நோர்டெக் நகரில் பணி தொடர்பான முகாம் ஒன்றிலும் கலந்து கொண்டார்.
இந்தநிலையில், 2015 ஓகஸ்ட் 23 ஆம் திகதியிலிருந்தே கொலை செய்யும் நோக்குடன் கொஷ்வால், ஸ்கோவின் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைய முயன்றதாக அயல் வீட்டுக்காரர் சாட்சியம் அளித்துள்ளார்.
இரவு நேரங்களில் வாயில் கதவின் அழைப்பு மணியை நீண்ட நேரமாக ஒலிக்கவிட்டும், மிரட்டும் தொனியில் ஸ்கோவை அழைப்பதுமாக இருந்தார் என கொஷ்வால் தொடர்பில் அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.