ஓட்டாவா- கட்டினோ மருத்துவமனையில், செவிலியர்கள் முதியவர் ஒருவருக்கு தவறான மருந்துகளை கொடுத்தால் அவர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில், முழு அறிக்கையை உடற்கூறாய்வு செய்பவரான பவுலி வெளியிட்டுள்ளார்.
இதில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. இதில் ஈடுபட்ட செவிலியர் மற்றும் துணை செவிலியர் ஆகியோரை அவர்களின் தொழில்முறை அமைப்புகளுக்கு விசாரணைக்கு அனுப்புமாறும் பவுலி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக பதிலளிக்க செவிலியர்களுக்கான தொழில்முறை அமைப்பு முன்வரவில்லை.
கனடாவில் கடந்த 2017ஆம் ஆண்டு, 85 வயதான வில்லியம் மடையர் என்பவர், உடல்நலம் மற்றும் மன நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே அறையில் பெண் நோயாளி ஒருவரும் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை தவறுதலாக வில்லியமுக்கு செவிலியர்கள் கொடுத்துள்ளனர். மருந்தின் வீரியம் காரணமாக இரண்டு நாட்கள் சுயநினைவை இழந்த வில்லியம் பின்னர், உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த கவனயீனமான சம்பவம், ஓட்டாவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.