Reading Time: < 1 minute

கனேடிய உணவு வங்கி ஒன்று, கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உணவு கொடுக்கமுடியாது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.

அந்த உணவு வங்கியின் செயல், சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

வான்கூவரிலுள்ள உணவு வங்கி ஒன்று, உணவு வாங்க வந்த சர்வதேச மாணவர்களில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உணவு கொடுக்கமுடியாது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.

சர்வதேச மாணவர்கள் தங்கள் தேவைகளுக்காக 20,635 டொலர்களை தங்கள் வங்கிக் கையிருப்பில் வைத்திருக்கவேண்டும் என்பது சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் கொள்கை என்கிறது வான்கூவர் உணவு வங்கி.

ஆக, அவர்கள் தங்களுக்கான செலவுகளைத் தாங்களேதான் கவனித்துக்கொள்ளவேண்டும், உணவு வங்கியின் உதவியை நாடக்கூடாது என வாதம் முன்வைத்துள்ளது அந்த உணவு வங்கி.

ஆனால், கனடாவின் விலைவாசி நிலைமை அனைவருக்கும் தெரியும். உணவு வங்கி என்பதே கஷ்டப்படுபவர்களுக்குத்தான்.

அப்படியிருக்கும்போது, புதிதாக கனடாவுக்கு வந்த மாணவர்கள் விலைவாசி உயர்வு குறித்து கவலைப்பட்டு உணவுக்காக உணவு வங்கிக்கு வரும்போது அவர்களை திருப்பி அனுப்புவது நியாயமில்லை என சமூக ஊடகங்களில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அத்துடன், உணவு வங்கிகள் மக்கள் வரிப்பணத்தில் இயங்குகினறன. சில பல்கலை வளாகங்களில் இயங்கும் உணவு வங்கிகளுக்கு மாணவர்களின் நிதிப் பங்களிப்பும் உள்ளது.

சர்வதேச மாணவர்கள் உள்ளூர் மாணவர்களைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிக கல்விக்கட்டணம் செலுத்துகிறார்கள்.

அப்படியிருக்கும்பட்சத்திலும், மாணவர்களுக்கு உணவளிக்க மறுப்பது நியாயமில்லை என்னும் ரீதியில், குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.