கனடாவிற்கான ரஸ்ய தூதரகம் தமக்கு தூதரக சேவையை வழங்க மறுக்கப்பட்டதாக ரஸ்ய பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். எலினா புஸ்கெரிவா என்ற பெண்ணே இவ்வாறு தூதரகம் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த பெண்ணின் முகநூல் பயன்பாடு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி, சேவை வழங்குவது நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில தசாப்தங்களுக்கு முன்னதாக ரஸ்யாவிலிருந்து வெளியேறிய குறித்த பெண், இந்த சம்பவம் தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது பிள்ளைகளின் ஆவணங்கள் குறித்த சேவையை பெற்றுக்கொள்ளவே கனடாவில் உள்ள ரஸ்ய தூதரகத்திற்கு எலினா சென்றுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக தாம் சில தசாப்தங்களுக்கு முன்னதாக ரஸ்யாவை விட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கனடாவிற்கான ரஸ்ய தூதுவரின் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாறு சேவை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
முகநூல் பக்கமொன்று தொடர்பிலேயே குறித்த பெண்ணுக்கு சேவை வழங்குவதனை ரஸ்ய தூதரகம் நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முகநூல் பக்கத்தில் ரஸ்ய நலன்களுக்கு முரணானதும் எதிரானதுமான கருத்துக்கள் காணப்படுவதாக தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.