நேற்று முன்தினம் இரவு மிசிசாகாவில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு பத்து மணியளவில், நெடுஞ்சாலை 410இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், Derry வீதிக்குச் செல்லும் வழியில் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் வந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தினை அடுத்து, அங்கே வாகனம் ஒன்றினுள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதனை பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த மூவரில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், மேலும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர், மிசிசாகா ஸ்குயர் வண் வர்த்தக வளாகத்திலிருந்து சிறிது தூரத்தில், Webb Driveவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிற்கு வெளியே இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அங்கே உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றிற்கு முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு நிற வாகனம் ஒன்றினுள் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.
வாகனத்தின் சாரதி இருக்கைப் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட அந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும், சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
விசாரணைகள் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதனால், இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.