Reading Time: < 1 minute

கோவிட்19 தொற்று நோயின் சவாலானதொரு காலகட்டத்துக்குள் கனடா நுழைந்துள்ளது. இவ்வாறான நிலையில் கனேடியர்கள் பொது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் நேற்று கேள்வி-பதில் அமர்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட டாக்டர் டாம், கனடியர்கள் கூட்டமாக ஒன்றுகூடுவதற்கான நேரம் இதுவல்ல என்று தெரிவித்தார். நாடு தொற்று நோயின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ள நிலையில் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வருகின்றன.

அனைவருக்குமான தடுப்பூசிகளை வழங்க இன்னும் சிறிது காலம் தேவைப்படும் நிலையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கோவிட்19 தொற்று நோயின் தற்போதைய எழுச்சி முன்னரை விட மோசமானதாக இருக்கும். ஏனெனில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ்கள் தற்போது அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனவும் டாம் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த நாம் முயன்று வருகிறோம். தடுப்பூசி போட விரும்பும் ஒவ்வொரு கனேடியரும் தமக்கான ஒரு தடுப்பூசியை அநேகமாக ஜூன் மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டார்.