ஆசிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளைத் திருப்பிக் கொடுக்குமாறு கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அது, Mr. Right நிறுவனத்தின் Kaempferia Galanga Powder என்னும் ஒருவகை இஞ்சிப் பொடி ஆகும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த மசாலாவுடன் தொடர்புடைய உணவைச் சாப்பிட்டதால்தான் ஒன்ரறியோவின் Markham நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்ட 12 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அவர்களில் மூன்று பேர் இன்னமும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில்தான் இருக்கிறார்கள்.
இந்த மசாலா பொருள், பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாகாணங்களிலும் அது விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி, அந்த உணவுப் பொருளை பயன்படுத்தவேண்டாம் என்றும், அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த மசாலாவில் aconite என்னும் நச்சுப்பொருள் இருப்பதாலேயே அது திரும்பப்பெறப்படுகிறது.
அந்த நச்சுப்பொருளை உட்கொண்டால், மயக்கம், வாந்தி, தலைசுற்றல், சோர்வு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படுவதுடன், அதிக பாதிப்பால் மரணமும் நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.