ஒன்றாரியோ சிறு வணிக ஆதரவு மானியம் சில சிறு வணிக உரிமையாளர்களுக்கு மானியமாகக் குறைந்தபட்சம் 10,000 டொலர்கள் மற்றும் அதிகபட்சம் 20,000 டொலர்கள் வழங்கப்படுமென முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 26ஆம் திகதி முதல் தொடங்கும் பொதுமுடக்கம் முழு மாகாணத்தையும் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முடக்கிவிடும். இதனால், ஒன்றாரியோவின் சிறு வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இவ்வாறு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மாகாண அளவிலான பொதுமுடக்கத்தின் காரணமாகச் சேவைகளை மூட அல்லது கணிசமாக கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய வணிகங்கள் தகுதியற்றவை. அவர்கள் நிறுவன மட்டத்தில் 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஏப்ரல் 2019 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2020 இல் குறைந்தபட்சம் 20 சதவீதம் வருவாய் சரிவை சந்தித்திருக்க வேண்டும்.
2020 வசந்த காலத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதால் இந்தக் காலம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அரசாங்கத்தின் அறிக்கை கூறுகிறது.
இந்த மானியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த விபரங்கள் ஜனவரி 2021க்கு பின்னரே கிடைக்கும்.