Reading Time: < 1 minute

கடந்த ஆண்டைவிட பொது போக்குவரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பின்மையை உணர்த்துவதாக பெரும்பாலான ஒன்ராறியோ மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பகுதியில் போக்குவரத்தில் அல்லது அதற்கு அருகில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், ஒன்ராறியோ மக்களிடம் இருந்து இந்த கருத்து வெளியாகியுள்ளது.

வெளியான கருத்துகளின் அடிப்படையில், மற்ற மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, பொதுப் போக்குவரத்தில் பெரும்பாலான ஒன்ராறியோ மக்கள் குறைவான பாதுகாப்பை உணர்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

சுமார் 66% ஒன்ராறியோ மக்கள் பொது போக்குவரத்தை ஒருவித பயத்துடனே நாடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில், ரொறன்ரோ நகர நிர்வாகம் தெரிவிக்கையில், TTC வளாகங்களில் தற்காலிகமாக 50 பாதுகாவலர்களை நியமித்துள்ளதாக உறுதி அளித்திருந்தது.

மட்டுமின்றி, ரொறன்ரோ பொலிஸ் துறையும் 50 சிறப்பு காவலர்களை பணிக்கு சேர்த்துக்கொள்ளும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஒன்ராறியோ மக்கள் பொது போக்குவரத்து தொடர்பில் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் 10ல் 6 கனேடிய மக்கள் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்களில் 65% மக்கள் பாதுகாப்பின்மை தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களில் மட்டும் TTC வாகனங்களில் கொள்ளை முயற்சி, பல கத்திக்குத்து தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஊழியர்களும் தற்செயலான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.