ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையம் ஊடாக மேற்கொள்ளப்ப்ட்ட பாரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் இரகசிய விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த கனேடிய மத்திய காவல்துறையினர், குறித்த இந்த கடத்தல் தொடர்பில் சண் விங் பயணிகள் விமானப் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளனர்.
“புரஜெக்ட் வூட்கிராஃப்ட்” எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த இநத இரகசிய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த வாரம் ஹமில்ட்டன், ரொரன்ரோ, பிரான்ட்ஃபோர்ட், கிச்சனார் மற்றும் டூர்ஹம் பிராந்தியங்களில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த நடவடிக்கையின் போது 42 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் தற்போதய சந்தை மதிப்பு சுமார் 10 மில்லியன் டொலர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கைது செய்யப்படட சண்விங் விமான நிறுவனப் பணியாளர்கள் இருவரும், குறித்த இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்காக விமான நிலையத்தில் செயலாற்றிவந்ததாகவும், விமானநிலையப் பணியாளர்கள் மத்தியிலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வினியோக கும்பல்கள் மத்தியிலும் ஊடுருவிய இரகசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த விசாரணைக்கு பெரிதும் உதவியதாகவும், கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.