பேஸ்பால் விளையாட்டுப் போட்டியொன்றைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், தாம் 10 மில்லியன் டொலர் லாட்டரி பரிசை வென்றுள்ளதாக அறிந்து அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த சம்பவம் ஒன்ராறியோவில் இடம்பெற்றுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தின் கிங் சிட்டி பகுதியைச் சேர்ந்த பிராண்டன் ஜி என்பவரே இந்த மிகப்பெரிய பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
தனது உறவினர் பங்கேற்ற பேஸ்பால் போட்டியை பார்வையாளர் அரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசிக்கு ஒன்ராறியோ லாட்டரி மற்றும் சூதாட்டக் கழகத்திடமிருந்து தொடர்ச்சியாகப் பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
ஆரம்பத்தில் அவற்றை தேவையற்ற மின்னஞ்சல்கள் என நினைத்த பிராண்டன், பின்னர் தனது லாட்டரி கணக்கில் உள்நுழைந்து பரிசுத் தொகையைச் சரிபார்த்துள்ளார்.
“முதலில் நான் 10,000 டொலர் மட்டுமே வென்றதாக நினைத்தேன். பின்னர்தான் அதிலிருந்த கூடுதல் பூஜ்ஜியங்களைக் கவனித்தேன். அது 10 மில்லியன் டொலர் என்பதை உணர்ந்தபோது அதிர்ச்சியடைந்தேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போட்டி நடைபெற்ற இடத்திலிருந்து தனியாகச் சென்ற அவர், தனது துணைவியாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
பரிசுத் தொகை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் வரை, தங்களால் இந்த அதிர்ஷ்டத்தை முழுமையாக நம்ப முடியவில்லை என அந்தத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
10 மில்லியன் டொலருக்கான காசோலையைப் பெற்றுக்கொண்ட பிராண்டன், இந்த வெற்றி தனது குடும்பத்தின் எதிர்காலம் தொடர்பான மன அமைதியையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
எனினும், பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், உடனடியாக வேலையை விட்டு விலகும் திட்டம் இல்லை என்றும், தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




