தான் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் என்று தெரிவித்து வயதான தம்பதியரிடம் மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலந்தைச் சேர்ந்த குறித்த அந்த தம்பதியரை வியாழக்கிழமை பிற்பகல் 1:30 அளவில் தொலைபேசி வாயிலாக அழைத்த அந்த இனந்தெரியாத பெண், அந்தத் தம்பதியரிடம் போலந்து மொழியில் பேசியதாகவும், தன்னை ஒரு அதிகாரியாக இனங்காட்டிக்கொண்ட அந்தப் பெண், குற்றக் குழு ஒன்றைக் கைது செய்வதற்கான சட்ட நடவடிக்கைக்காக ஒரு தொகைப் பணத்தினையும் நகைகளையும் ஒரு பையில் போட்டு வீட்டின் வெளியே வைக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அந்த தம்பதியரும் அவ்வாறே செய்ததாகவும், எனினும் சிறிது நேரத்தில் அந்தப் பை திருடிச் செல்லப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர், காவல்துறை அதிகாரிகள் ஒருபோதும் இவ்வாறு தொலைபேசி வாயிலாக பெறுமதியான பொரும்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பதனை நினைவூட்டியுள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், இது தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை (416) 808-1104 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.