Reading Time: < 1 minute

கனேடிய புலம்பெயர்தல் அமைச்சகத்தின் தவறால், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் கிடக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகம், பல்லாயிரக்கணக்கான நிரந்தர குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை, செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை அவ்வகையில் 59,456 விண்ணப்பங்கள், செயல்படாத 779 முன்னாள் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அலுவலர்களின் பெயர்கள் விண்ணப்பித்த யாருக்கும் தெரியாது. அவர்களுடைய அடையாள எண்கள் மட்டுமே தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும். உதாரணமாக, AB12345 என்ற எண்ணைக் கூறலாம்.

Andrea Bote என்ற பெண், 2021ஆம் ஆண்டு, மே மாதம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்தார். 18 மாதங்களாக அவரது புலம்பெயர்தல் அலுவலரிடமிருந்து அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய விண்ணப்பம் RA9519 என்ற அடையாள எண் கொண்ட புலம்பெயர்தல் அலுவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அவருடன் விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைத்துவிட, என்ன நடக்கிறது என்று புரியாமல், சொந்த நாட்டுக்கு விடுமுறைக்குக் கூட செல்லாமல் காத்திருக்கிறார் Andrea.

Joey Lao, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்தார். அவருக்கும் அவரது புலம்பெயர்தல் அலுவலரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய விண்ணப்பம் SM10353 என்ற அடையாள எண் கொண்ட புலம்பெயர்தல் அலுவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் விண்ணப்பித்த தனது உறவினருக்கு குடியிருப்பு அனுமதி கிடைத்துவிட, என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருக்கிறார் அவர்.

ஆகவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருப்போர், உங்கள் விண்ணப்பம் இப்படி செயல்படாத அலுவலர் யாருக்காவது ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.