Reading Time: < 1 minute

கொவிட் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பியனுப்பும் வகையில் கனடா முன்னெடுத்துவந்த கொள்கைத் திட்டம் முடிவுக்கு வருகிறது.

புதுப்பிக்கப்பட்ட கனடாவில் கொவிட் தொற்று நோய் தடுப்பு கொள்கைத் திட்டத்தில் அகதிகளை எல்லையில் வைத்து திருப்பியனுப்பும் நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் 2020 மார்ச் முதல் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு இடையிலான காலப்பகுதியில் மட்டும் இக்கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் குறைந்தபட்சம் 544 அகதிகளை எல்லையில் வைத்து கனடா திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இந்தக் கொள்ளைத் திட்டத்தை கனடா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த கொள்கையை இப்போது ஏன் இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது? மற்றும் தடுப்பூசி போடப்படாத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஏதேனும் தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளனவா? என்பது குறித்த கேள்விகளுக் கனடிய அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கனேடியர்களின் சுகாதார பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை அவசியம் என்று கனடா கூறியது. எனினும் அகதிகளுக்கான சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமையாளர்கள் கனடாவின் இந்த நடவக்கை விவேகமானதாக அமையாது என வாதிட்டனர்.

தொழில்முறை விளையாட்டு வீரர்கள் தொற்றுநோய்களின் போது கனடா வர வழங்கப்பட்ட விலக்குகளை அவா்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், பாதுகாப்புத் தேடி கனடா வரும் மக்களை தடுக்கும் அதேவேளை, சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் அர்த்தமில்லை என்று அகதிகள் நல வழக்கறிஞரும் கனேடிய சங்கத்தின் முன்னாள் தலைவருமான மவுரீன் சில்காஃப் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.