கனடாவில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வருகைக்காக கனேடிய மக்கள் வரிப்பணத்தில் சுமார் 1.4 மில்லியன் டொலர் செலவிடப்படும் என கூறப்படுகிறது.
2023 மே மாதம் 17 முதல் 19 வரையில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி கனடாவுக்கு வருகை தர உள்ளது. குறித்த சுற்றுப்பயணத்தில் நியூஃபவுண்ட்லேண்ட், ஒன்ராறியோ மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் அவர்கள் செல்ல உள்ளனர்.
தோராயமாக 57 மணி நேரம் கனேடிய சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் மன்னருக்காக கனேடிய நிர்வாகம் மணிக்கு 25,000 டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த 1.4 மில்லியன் டொலர் தொகையில், அரசாங்க, இராணுவ, பொலிஸ் அதிகாரிகளின் ஊதியங்கள் உட்படுத்தப்படவில்லை,
இது அனைத்தும் உட்படுத்தினால், இந்த தொகை மேலும் அதிகரிக்கக் கூடும். மட்டுமின்றி, உள்ளூர் அரசாங்கம் செலவிடும் தொகையும் இதில் உட்படுத்தப்படவில்லை.
ஆனால், பயன்படுத்தும் வாகனங்களுக்கான செலவு, விமான கட்டணம், ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு குழுவினருக்கான செலவு, தேசிய பாதுகாப்பு பிரிவினருக்கான செலவு என உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்வதால், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை. அதற்கான செலவு அந்த அரசாங்கமே பொறுப்பேற்கவும் வேண்டும் என நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.