Reading Time: < 1 minute

கனடாவுக்கு முதல் ‘க்ராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பட்டம் ஒன்று கிடைத்துள்ளதை அடுத்து கனடா மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இறுதிப்போட்டியில் கனடாவுக்கான முதல் பட்டத்தை பெற்றுக் கொடுத்த இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவாக்கு நாலா திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து 19 வயதான பியான்கா சம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இதனைப் பாராட்டியுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, பியான்காவால் கனடா பெருமையடைவதாக ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இறுதிப்போட்டியை கனடாவின் பல லட்சம் மக்கள் நேரடி ஒளிபரப்பாக கண்டு மகிழ்ந்ததுடன், ரொரண்டோ சர்வதேச திரைப்பட விழா, வேறு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு உணவகங்களில் குழுமியிருந்தவர்கள் பியான்காவின் வெற்றியை இரவிரவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.