Reading Time: < 1 minute

50 ஆண்டுகளுக்கு முன்னர் இழைத்ததாக கூறப்படும் பாலியல் குற்றச் செயல்களுக்காக வினிபெக்கைச் சேர்ந்த 92 வயதான முன்னாள் அருட்தந்தை ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மானிடோபா பொலிஸார் குறித்த முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

கடந்த 1968 மற்றும் 1970ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆர்த்தர் மேஸே என்ற 92 வயது முன்னாள் அருட்தந்தைக்குகு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வதிவிடப் பாடசாலையொன்றில் 10 வயதான சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்த முதியவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக் குற்றச் செயல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், 2011ம் ஆண்டு இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடாத்துவதில் சிரமங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர்களிடம் விசாரணை நடாத்த முடியாது எனவும் பலர் இறந்து விட்டதாகவும் பலர் கடுமையான நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.