Reading Time: < 1 minute

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதி்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கவனயீா்பில் ஈடுபட்டனர்.

ரொரண்டோ நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நேற்று கூடிய ஆயிரக்கணக்கானோர், பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு, பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி கோஷமிட்டனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கும் பாலஸ்தீனர்களுக்கு அவா்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தை பாலஸ்தீனிய இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்தது. இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் வட அமெரிக்கா மற்றும் உலகின் சில பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை மற்றும் அநீதிகளுக்கு எதிர்ப்பாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து பலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் எடுத்த முயற்சிகளுக்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து வன்முறை வெடித்துள்ளது.

பாலஸ்தீன மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஹமாஸ் விடுதலைப் போராளிகள் இஸ்ரேல் நோக்கி 2000 -க்கும் றே்பட்ட ரொக்கட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு செயற்பாட்டு அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் சுமார் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவைச் சுற்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பீரங்கிகளைக் கொண்டும் பாலஸ்தீன இலக்குகளை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இந்த மோதலின் விளைவாக குறைந்தது 145 பாலஸ்தீனியர்களும் எட்டு இஸ்ரேலியர்களும் இறந்துள்ளனர்.

இந்நிலையிலேயே பாலஸ்தீனர்களுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ரொரண்டோவில் நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.